Bed time story..


சிநேகிதி

அனுஷாவிற்கு அவள் அம்மா ஏன் அவளை அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றாள் என்று புரியவில்லை, புரிந்து கொள்ளவும் அளவுக்கு அவளிடம் பக்குவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏதோ அம்மா பேச்சிற்கு இணங்க கோவிலை மட்டும் சுற்றி வந்து, பிரசாதத்தை பூசாரி தன் நெற்றியில் வைத்தது எப்படி இருக்கிறது என்பதை சீக்கிரம் சென்று கார் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் சந்தோஷமாக கோவிலில் இருந்து வெளியே ஓடி வந்தாள் அனுஷா. அவள் அப்பா காரில் அவர்களுக்காக காத்திருந்தான் - பாட்டு கேட்ட படியே; 'ஏன் நம்மள உள்ள வர வேண்டாம்னு சொல்லீட்டா இவ?! ' என்று எண்ணிக்கொண்டிருந்த படியே.

'வாடா வாண்டு!' என்று அனுஷாவை அந்த காலத்துத் தாத்தாக்கள் கொஞ்சுவதுபோல் அவன் கொஞ்சினான். வண்டி புறப்பட்டது. அம்மா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. வழியெங்கும் மகளும் அப்பாவும் விடாது பேசி வந்தனர், உலகத்தின் கடைசிப் பயணம் போல. அவர்கள் வசதிக்காக ச்டீரீயோவின் சத்தத்தை குறைத்தனர். S.ஜானகி அமைதி ஆனார். வண்டி வேகமாக பாலக்காட்டைத் தாண்டி ஈரோடை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது; இரண்டு மூடாத வாய்கள், ஒரு திறக்காத வாயுடன்.

ஒரு வழியாக தன் மனதை திட படித்திக்கொண்டு, அனுஷா தூங்கும் நேரம் பார்த்து, சமையல் அறையில் வேலை இல்லாத இரவு வேளை பார்த்து, தன் மனைவி சந்தோஷமாக இருக்கும் சிறந்த தருணம் பார்த்து, 'உனக்கு என்னதான் பிரச்சன?', என்று அப்பா அம்மாவிடம் ஒரு மெல்லிய குரலில் கேட்டான். அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்திருந்தனர். வாணி ராணிக்கும் பிரியமானவளுக்கும் நடுவே ஹார்பிக் விளம்பரம்தான் போய்க்கொண்டிருந்தது என்றாலும் மனைவி காதில் அவன் கேட்டது விழவில்லை; பொதுவாகவே, எட்டியது போல் அவள் காட்டிக்கொள்ளவதும் இல்லை. 'ம்ம்.. 'உனக்கு என்னதான் பிரச்சன?!'', மிகுந்த தைரியத்துடன், சற்றே பலமான குரலில். மனைவி டீவியை அனைத்தாள். 'இல்ல அது இருக்கட்டும்... . ஏன் .. கோவில் போயிட்டு வரணும்னு சொன்ன... சரி. 1350 ரூபாய்க்கு டீஸல் போட்டு போயிட்டு வந்து ஒரு வாரம் ஆச்சு.. இன்னும் ஒன்னும் சரியா பேசல.. எப்பவுமே.. ஏதோ..', மனைவி கண்ணிகளில் நீர் துளிகள் தேங்கின. 'ஐயோ. இல்ல.. நீ நல்லதுக்குதான் பண்ணுவ.. ஆனா. எதுக்கு.. ' கேள்வியை முடிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அவன் வேறு என்ன செய்வது என்று தெரியாது, மிக விரைவான சிந்தனையின் பின், பெருமையாக, தன் மனைவியை சாந்தப்படுத்துவதற்கான சூட்சமம் தனக்கு தெரிந்த ஒன்று தானே என்று, மீண்டும் டீவியை துவங்கினான். பிரியமானவளில் மிகுந்த ஆவேசத்துடன் யாரோ யாரிடமோ சீரிக்கொண்டிருந்தார்.

அவள் இப்படி ஒரு ஜந்துவை கல்யாணம் செய்துள்ளோமே என்ற எண்ணங்களை மீறி, அணையை உடைத்து வரும் வெள்ளபெருக்கை போல் வர விருந்த கண்ணீரை கைது செய்து, பிரியமானவளையும் கண்டுகொள்ளாது,  திடமாக பேசத் துவங்கினாள்.. 'ரெண்டு மாசம் முன்னாடி நீங்க எங்கேயோ வெளியூர் போய்ர்ந்தப்போ.. பாப்பாவ தூங்க வச்சுட்டு வழக்கம் போல.. இதே மாதிரி நான் டீவி பார்க்க உக்காந்தேன்.. ஆன ஏதோ அசதில நான் இங்கயே சோபாவில தூங்கிட்டேங்க.. time போனதே தெரியல.. திடீர்ன்னு கண் முழிச்சி பாத்தா மணி 2:30.. டீவி ஒரு side-ல அதுமாடும் ஓடிக்கிட்டுருந்தது .. அடிச்சு புடிச்சு bedroom-க்கு அனுஷாவ பாக்க போனேன்.. ஆனா அவ அங்க இல்ல.. ரொம்ப பயமாயுடிச்சு..', எதைப்பற்றி தன் மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது சுத்தமாக புரியாத நிலையில் அவன் ஆர்வம் கலந்த எரிச்சலுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். '...அப்போ அடுத்த ரூம்ல யாரோ.. ஏதோ 'டக் டக்'ன்னு சத்தம் வந்ததுங்க.. எதுவும் யோசிக்காம சடார்ன்னு போய் பாத்தேன்..', மனதை உறுதிபடுத்திக்கொண்டு, கண்ணீரை துடைத்துக்கொண்டு, 'நான் அப்டியே .. செத்துட்டேங்க.. அனுஷா கூட ஒரு சின்ன பொண்ணும் இருந்தா.. இவ வயசு தான் இருக்கும்.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா விளையாடீட்டிருந்தாங்க.. அப்போ.. அந்த விளையாட்டு. .. அந்த பொண்ணு நெத்தியில அனுஷா.. சுத்தியல வச்சி பெரிய.. கருப்பு ஆணிய .. அந்த பொண்ணு ரொம்ப.. ரொம்ப.. ஜாலியா இருந்தா... ஆணி அவ நேத்திகுள்ள எறங்க எறங்க.. கை தட்டுனா.'

அவன் உறைந்தான். தன் வாயை மூடக்கூட அவனால் முடியவில்லை. மனைவி அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் இருப்பதை மறந்து அவள் பேசிக்கொண்டிருந்தாள், வழக்கம் போல. 'ஏதோ கனவுன்னு நெனச்சு.. அத அப்டியே மறந்திரலாம்ன்னு நெனச்சேன்.. ஆனா அது நிஜம்னு எனக்கு நல்லா தெரிஞ்சுது.. ஆனா எல்லைய மீறி பயந்தாலும் அத அப்டி விட்டுட்டேன்.. அன்னேலேந்து என்னால சரியா தூங்க முடியல... ரொம்ப .. ஐயோ அவ்ளோ பயம்!! அதுக்கப்புறம் தூங்கும்போதெல்லாம் அப்பப்போ அனுஷா நம்ம கூட இருக்காளான்னு பாத்துக்குவேன்.. நல்ல அழகா தூங்கீட்டிருப்பா.... ஆனா ஒரு 10  நாள் முன்னாடி.. நீங்க வழக்கம் போல தூக்கத்துல பொலம்பற நேரம் அது.. பன்னண்டு-பன்னன்டற இருக்கும்.. ஏதோ பாட்டு பாடிட்டே தூங்கிட்டு இருந்தேங்க.. ஆனா அப்போ நம்ம பொண்ணக் காணும்! எனக்கு பகீர்ன்னு ஆயிடிச்சு.. என்ன பண்றதுன்னுனே தெரியல!! எப்படியோ தைரியத்த வர வழச்சு.. தாலிய இருக்கமா புடிச்சிட்டு, school-ல படிச்ச ச்லோகம்லாம் சொல்லீட்டே அடுத்த ரூம் போய் பார்த்தேன்.. ', அவன் வாயை இன்னும் பிளந்தான், '... அனுஷா அதே பொண்ணு கூட இருந்தா.. எனக்கு பேச வார்த்தையே வரல.. நான் இருக்கறத அவங்க ரெண்டு பேரும் சுத்தமா கவனிக்கல.. அந்த பொண்ணு அப்பவும் ரொம்ப சந்தோஷமா இருந்தா.. அனுஷா. கைல தீக்குச்சி வச்சிருந்தா... ரூம் கிட்ட ஒரு மாதிரியான பொக நாத்தம்.. அந்த பொண்ணு கண் இமய நம்ம அனுஷா தீய வச்சு எரிசிட்டிருந்தாங்க...'

அப்பா மயக்கமானான்.. ஏறக்குறைய. 'அதான் அம்மன் கோவில் கூட்டீட்டு போக சொன்னே.. அவள்ட நான் இதப் பத்தி ஒன்னும் கேக்கல.. யார்ட்டேயும் ஒன்னும் சொல்லல.. கோவில்ல எனக்கு ஒரு தைரியம் கிடச்சுது... எல்லாம் சீக்கிரம் சரியாப்போயிரும்னு எனக்கு தோணிச்சி.. ஆனா கொஞ்சம் நேரம் தான்.. கோவில சுத்தி வரும்போது திடீர்னு அந்த பொண்ணு எங்க முன்னாடி வந்து நின்னா... என் கை காலு அப்டி கல்லு மாதிரி ஆயிடுச்சு.. உடம்புல ரத்த ஓட்டம் அப்டியே நின்னுருச்சு... நான் செத்து போன மாதிரி என் உடம்பு சில்லினு ஆயிடுச்சு.. அப்போ அனுஷாதான் என்ன உலுக்கி.. இதாம்மா என் friend பகவதின்னு சொன்னா. . அந்தப் பொண்ண மறுபடியும் ஒழுங்கா பார்த்தேன்.. வீட்ல இருந்த அதே பொண்ணு தான்.. அவ நெத்தியில நடுவுல ஒரு ஓட்டை இருந்தது.. யாரோ ஆணி அடிச்சு வச்ச மாதிரி.. அவ கண்ணுல இமையே இல்ல... '

அவன் மயக்கத்திலிருந்து மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு சுய நினைவுக்குத் திரும்ப முயன்றான். தன் மனைவி சொன்னது நிஜமா அல்லது வழக்கம் போல் உள்ள பிதற்றலா என்று அவனால் இம்முறை சரியாக கணிக்க முடியவில்லை. அவளின் நெஞ்சு இடி போல் அடித்துக் கொண்டிருந்தது. அவள் கையை அவன் மெதுவாகத் தொட்டான்.. அதனால் இருவருக்கும் ஒரு தெளிவு வரும் என்று அவன் உள்மனதில் நம்பினான். வேறு ஒன்றும் அவனுக்குத் தோன்றவும் இல்லை! ஆனால், அவனின் கையைப் பொருட்படுத்தாது ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் அவள் அனுஷா தூங்கிக்கொண்டிருந்த அறையை நோக்கித் திரும்பினாள்.. கூர்ந்து பார்த்தாள்.. உச்சி வானத்தில் வட்டமிடும் கழுகு போல் அல்ல, பாதை இழந்த மான் ஒன்று தன்னைச் சூழ்ந்திருக்கும் சிங்கக்கூட்டத்தையும் கழுதைப்புலிகளையும் பார்ப்பது போல்.... அவனும் என்ன வென்று திரும்பிப் பார்த்தான்.. பவ்யமாக, மிரண்டு போய்.

படுக்கை அறையை விட்டு இரண்டு பேர் இவர்களை நோக்கி அடி மேல் அடி வைத்து ஆனந்தப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை போலும்.. ஆம்! அனுஷாவும் பகவதியும்..  இமயில்லா பகவதி கையில் ஒரு தீக்குச்சி ஜூவாலையாக எரிந்து கொண்டிருந்தது.. அனுஷாவிடம் சுத்தியும், கூரான கருப்பு ஆணியும்.
***

No comments:

The Queen’s Gambit (Review)

(Glad that my review got published in Readers Write  - Thank you so much Baradwaj Rangan! ) Streaming on Netflix and consisting of seven epi...